கபிலதேவ நாயனார் அருளியது
பதினோராம் திருமுறை
1. மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
500
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
1
501
கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.
2
502
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடியவலோ டெள்ளுண்டை கன்னல் - வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.
3
503
வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டைஎல் லாந்துறுத்தும்
பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே.
4
504
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
5
505
கனிய நினைவொடு நாடொறும் காதற் படும் அடியார்க்
கினியன் இனியொரு இன்னாங் கிலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.
6
506
யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்.
7
507
உளதள வில்லதோர் காதலென் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத்
திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.
8
508
கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தட் சடைமேல் - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.
9
509
போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாளம் பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்தெந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே.
10
510
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் - தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழலங்கை
முக்கட் கடாயானை முன்.
11
511
முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீனுயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத்
தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மேயுமையாள்
தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே.
12
512
சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க
முரணுடையேன் அல்லேன் நான்முன்னம் - திரள்நெடுங்கோட்
டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர்
பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.
13
513
பண்டந்த மாதரத் தானென் றினியன வேபலவும்
கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூருணர்வில்
கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றை யொற்றை
வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே.
14
514
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்
தாட்கொண் டருளும் அரன்சேயை - வாட்கதிர்கொள்
காந்தார மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண்.
15
515
விண்ணுதல் நுங்கிய விண்ணுமண் ணுஞ்செய் வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமா
கண்ணுதல் நுங்கிய நஞ்சம்உண் டார்கரு மாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாவொரு பாகன் பெருமகனே.
16
516
பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்.
17
517
வருகோட் டருபெருந் தீமையும் காலன் தமரவர்கள்
அருகோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தஅன்பு
தருகோட் டருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும்
ஒருகோட் டிருசெவி முக்கட்செம் மேனிய ஒண்களிறே.
18
518
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.
19
519
நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக னேஎன்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே.
20
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

கபிலதேவ நாயனார் அருளியது
பதினோராம் திருமுறை
2. சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
520
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் - அந்தியில்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.
1
521
மிடற்றாழ் கடல்நெஞ்சம் வைக்கின்ற ஞான்றுமெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.
2
522
கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் - திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.
3
523
இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லாரெருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர் சென்னிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணம்ஒழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.
4
524
இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.
5
525
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்
தாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர் கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.
6
526
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் - கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியரா வாரோ பிறர்.
7
527
பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றி யேதிரி யும்புரமூன்
றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாண்இடைக் கோத்தகை வானவனே.
8
528
வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் - கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக் கெய்தா திடம்.
9
529
இடப்பா கமும்உடை யாள்வரை யீன்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டெங்கும் மூடும்எங் கண்ணுதலே.
10
530
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலமில்லை - தண்ணலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.
11
531
மதிமயங் கப்பொங்கு கோழிருட் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே.
12
532
கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் - அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.
13
533
புறமறை யப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்
நிறமறை யத்திரு நீறு துதைந்தது நீள்கடல்நஞ்சு
உறமறை யக்கொண்ட கண்டமும் சால உறப்புடைத்தால்
அறமறை யச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.
14
534
அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ - பொடியாடு
நெற்றியூர் வாளரவ நீள்சடையாய் நின்னூரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.
15
535
உரைவந் துறும்பதத் தேஉரை மின்கள்அன் றாயின்இப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைவந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.
16
536
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோடயனும் மாலும் - துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.
17
537
நன்றைக் குறும்இருமற்பெரு மூச்சுநண் ணாத முன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.
18
538
கொண்ட பலிநுமக்கும் கொய்தார் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே - மண்டி
உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
19
539
வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்
செந்தா மரைச்செவ்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஓடிப் பிடித்திட்ட இன்மலரே.
20
540
மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் - கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.
21
541
தேவனைப் பூதப் படையனைக் கோதைக் திருவிதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன்இவை நான்வல்ல ஞானங்களே.
22
542
நானும்என் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் - வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூர்த்த
எம்பெருமான் என்னா இயல்பு.
23
543
இயலிசை நாடக மாய்எழு வேலைக ளாய் வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண் காடர்வெண் தில்லை மல்கு
கயலியல் கண்ணியங் கார்அன்பர் சித்தத் தடங்குவரே.
24
544
அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை - நுடங்கிடையீர்
ஊருரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே
ஆருரன் செல்லுமா றங்கு.
25
545
அங்கை மறித்தவ ரால்அவி உண்ணும்அவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.
26
546
நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ - வட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்றப் பேயின் கொடிறு.
27
547
கொடிறு முரித்தன்ன கூன்தாள் அலவன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவை நஞ்சம்
மிடறு தடுத்தது வும்அடி யேங்கள் விதிவசமே.
28
548
விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் - நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேல் கொன்றைக்குறுந் தெரியல்
தொட்டுக்காட் டாய்சுழல்வாய் தொக்கு.
29
549
தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவும்
நக்கு வருங்கண்ணி சூடிவந் தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்வரும் போதவ ரைக்காண வெள்குவனே.
30
550
வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் - வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்அதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.
31
551
கூறு பெறுங்கண்ணி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்
தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.
32
552
நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ - நறுந்தேன்
படுமுடியாப் பாய்நீர் பரந்தொழுகு பாண்டிக்
கொடிமுடியாய் என்றன் கொடி.
33
553
கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்டக் கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறும்அஞ்சி நஞ்சம்இருந்தநின் கண்டத்தையே.
34
554
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்
சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் - தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகுவரே தீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.
35
555
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடல் என் னாஞ்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர் கோன்அயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.
36
556
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாள்அரக்கன்
துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் - தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றத்தான் தேசு.
37
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

கபிலதேவ நாயனார் அருளியது
பதினோராம் திருமுறை
3. சிவபெருமான் திருவந்தாதி
557
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.
1
558
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை - மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம்.
2
559
உளமால்கொண் டோடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தவா றுண்டே - உளம்மாசற்
றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.
3
560
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.
4
561
அலராளுங் கொன்றை அணியலா ரூரற்
கலராகி யானும் அணிவன் - அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவான்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
5
562
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன் றுடைதோலே - ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.
6
563
பரியானை ஊராது பைங்கணே றூரும்
பரியானைப் பாவிக்க லாகா - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
7
564
கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.
8
565
பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம்.
9
566
அறமானம் நோக்கா தநங்கனையும் செற்றங்
கறமாநஞ் சுண்ட அமுதன் - அறமான
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.
10
567
ஒளியார் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கோடற்
கொளியான் உலகெல்லாம் ஏத்தற் - கொளியாய
கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.
11
568
கடியரவர் அக்கர் கரிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவர்
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.
12
569
யாமான நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார் - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம்.
13
570
யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும் குன்றுவித்து - யானென்றங்
கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது.
14
571
அரியாரும் பூம்பொழில் சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.
15
572
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா - வியந்தாய
கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.
16
573
கடனாகம் ஊராத காரணமுங் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாய் பணி.
17
574
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோ
னாகத்தான் செய்யும் அரன்.
18
575
அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியும்மற் றந்தோ - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.
19
576
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரான் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆருர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன்.
20
577
அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள தாடை
அயமாவ தானேறூர் ஆரூர் - அயமாய
என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.
21
578
ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென்
றாழும் இவளை அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
சலமுடியா தின்றருளுன் தார்.
22
579
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கம் சரிவித்தான் - தாராவல்
ஆனைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
ஆனையும் வானோர்க் கரசு.
23
580
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்
அரசுமாம் அங்கொன்று மாலுக் - கரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கின்பன்
ஊர்தி எரித்தான் உறா.
24
581
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்
துறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள்
காவாலி தாநின் கலை.
25
582
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலீர்நாண் காமின் - கலையாய
பான்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பான்மதியன் போந்தான் பலிக்கு.
26
583
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கன் சூழப்
பலிக்கு மனைப்புகுந்து பாவாய் - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
27
584
ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.
28
585
தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.
29
586
கூரால மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.
30
587
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலனற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம்.
31
588
குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடி குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற் காளாஞ் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.
32
589
திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் - திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ டென்னை உடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து.
33
590
உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடையாடை தோல்பொடிசந் தென்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.
34
591
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா துடம்பழிக்கும் ஒண்திதலை - உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.
35
592
இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே - இன்றியாம்
காட்டாநஞ் சேற்றாஅன் காமரு வெண்காட்டான்
காட்டான்அஞ் சேற்றான் கலந்து.
36
593
கலம்பெரியார்க் காஞ்சிரங்காய் வின்மேரு என்னும்
கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை - கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.
37
594
கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் - கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.
38
595
மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனையா சறச்செற்ற வானோன் - மனையாய
என்பாவாய் என்றேனுக் கியானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.
39
596
இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
இறையாகம் இன்றருளாய் என்னும் - இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.
40
597
மாதரங்கந் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.
41
598
தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான் - விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவிச்
செல்லும்எழில் நெஞ்சே தெளி.
42
599
தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கட் செல்வர் - தெளியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.
43
600
புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு.
44
601
நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையாம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டான் மதி.
45
602
மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வம் கொண்ட வனப்பு.
46
603
வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான் கொள்ள - வனப்பாற்
கடற்றிரையு மீருமிக் கங்குல்வா யான்கட்
கடற்றிரையு மீருங் கனன்று.
47
604
கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் - கனன்றோர்
உடம்பட்ட நாட்டத்தர் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.
48
605
உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம் உடையன் - உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற் கீதோ வடிவு.
49
606
வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்மேல்
முக்கூடல் அம்மா முருகமருங் கொன்றையந்தார்
முக்கூட மாட்டா முலை.
50
607
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் - முலைநலஞ்சேர்
மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.
51
608
வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே காணில் - வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.
52
609
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.
53
610
அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்
தக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு - வக்காரம்
பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.
54
611
பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் - பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்
காலங்கை ஏந்தினான் காண்.
55
612
காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே - காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.
56
613
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்
தஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு.
57
614
ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
ஆக்கூர் அலர்தான் அழகிதா - ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.
58
615
வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் - வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.
59
616
நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.
60
617
இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே
இலமலரே ஆயினும் ஆக - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க் காடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.
61
618
ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும்
ஆளானார் ஊரத்தான் ஏறூரும் - தாளான்பொய்
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.
62
619
நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள்
அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்
அம்பகலம் பாயும் அலர்ந்து.
63
620
அலங்காரம் ஆடரவம் என்பதோல் ஆடை
அலங்கார வண்ணற் கழகார் - அலங்காரம்
மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.
64
621
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்
விரையார் பொழிலுறந்தை மேயான் - விரையாநீ
றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.
65
622
எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக்
கண்டத்தான் நெஞ்சேகாக் கை.
66
623
காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாப்பா னையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊன்குரக்குக் - காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான தமைவு.
67
624
அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே - எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான்.
68
625
தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன் தண்பழனன் - தானத்
தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள்.
69
626
அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதன் - அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.
70
627
உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை - உவவா
றெழுமதிபோல் வான்முகத் தீசனார்க் கென்னே
எழுமதிபோல் ஈசன் இடம்.
71
628
இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி - இடமாய
மூளா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி.
72
629
முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும் - முனிவன்மால்
போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.
73
630
புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.
74
631
மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார வாரான் - மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.
75
632
போந்தார் புகஅணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார் - போந்தார்
இலங்கோல வாள்முகத் தீசனாற் கெல்லே
இலங்கோலந் தோற்ப தினி.
76
633
இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் - இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம்.
77
634
தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் - தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.
78
635
பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன்
பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.
79
636
கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங் குற்றாலம் - கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றார்க் கிடங்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர்.
80
637
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்
சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.
81
638
உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்
துயிராய ஒண்மலர்த்தாள் ஊடே - உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கட் பட்டு.
82
639
பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு.
83
640
கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.
84
641
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் - செய்யாமுன்
நாட்டுணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டுணாய் நின்றானை நாம்.
85
642
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே - நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.
86
643
சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.
87
644
குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது.
88
645
போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.
89
646
கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்
அமரர்க் கமரர் அரர்க்கடிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.
90
647
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் - ஆஆ
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.
91
648
பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ டாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி - பகனாட்டம்
தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடைய
தாங்கால் தொழுதல் தலை.
92
649
தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் - தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்லிடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.
93
650
பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான்
பண்பாய பைங்கொன்றைத் தார்அருளான் - பண்பால்
திருமாலு மங்கைச் சிவற் கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.
94
651
சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர் என்னும் - சிவன்மாட்டங்
காலிங் கனம்நினையும் ஆயிழையீர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.
95
652
ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்
காறார் சடையீர்க் கமையாதே - ஆறாத
ஆனினித்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு.
96
653
ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம்.
97
654
புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி - புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.
98
655
மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் - வெய்ய
துணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.
99
656
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
நூறா நொடிஅதனின் மிக்கதே - நூறா
உடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன்று.
100
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com